TRENDING

தசரா பெரும் திருவிழா - 2017 அழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய

தசரா பெரும் திருவிழா - 2017 அழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய
  2017 தசரா திருவிழா அழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

                                       அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை
                           அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்
                                 குலசேகரன்பட்டினம்,  திருச்செந்தூர் வட்டம்.


பேரன்புடையீர் ! 
திருமுருகன் அருளாட்சி புரியும் செந்திலம்பதி திருச்செந்தூர் அருகில் உள்ள கடற்கரை பட்டினமாகிய குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் எனும் பெயர் கொண்டு கருணை மழை பொழிந்து கொண்டிருக்கும் மூவுலகிற்கும் நாயகி, அம்மையும் அப்பனுமாக காட்சியளிக்கும் அற்புத தெய்வமாம் அன்னை முத்தாரம்மனுக்கு நாளது வருடம் புரட்டாசி மாதம் 5ம் நாள் 21-09-2017 வியாழக்கிழமை கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்கி அதனை தொடர்ந்து 02.10.2017 வரை சிறப்புமிக்க தசரா பெருந் திருவிழா நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழா நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருள்பெற அன்புடன் வேண்டுகிறோம். வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும் முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும் பலவாறாக அன்னை பெயர்க்காரணம் பெறுகின்றாள். அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற திருக்கோயில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும். வினை மற்றும் மனநோய்களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு தம் குறைகள் நீங்கப்பெறுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவர் தவவலிமை மிக்கவராக இருந்தார் ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் அகத்தியமுனிவரை மதிக்கத் தவறியதோடு அவமரியாதையும் செய்தார். மனம்நொந்த தமிழ்ஞானி அகத்தியர் வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக! எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினார். தனது விடாமுயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி, மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த 10ம் நாள் விஜயதசமி வெற்றித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கூடிக்கொண்டாடும் இவ்விழா தமிழகத்திலேயே இங்குதான் முதலிடத்தை வகிக்கிறது.

தி.சு. ரோஜாலி சுமதா பி.ஏ.பி.எல்.எம்எல்,
தக்கார்/உதவி ஆணையர்,

அ.தி. பரஞ்ஜோதி எம்.காம்,பிஎல்.
இணை ஆணையர்

இரா.இராமசுப்ரமணியன், எம்ஏ. எம்.பி.ஏ. எம்.எஸ்.சி.
செயல் அலுவலர். 


 
Back To Top