
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசராத் திருவிழா தமிழ் நாட்டு திருக்கோயில்களின் விழாவினும் அதிக மக்கள் கூடும் திருக்கோயிலாக விளங்குகிறது. மேற்படி திருவிழாவில் கலந்து கொள்ளும் லட்சோப லட்சம் பக்தர்கள் கீழ்கண்ட விதிகளையும் மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி நடக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. திருக்கோயிலுக்கு வேடமணிந்து வரும் பக்தர்கள் உலோகத்தாலான ஆயுதங்ளை கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது தவறின் காவல் துறை ஆயுதத்தைப் பறிமுதல் செய்வதுடன் வழக்கும் பதிவு செய்யப்படும்.
2. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடும்போது கரையோரமாக பாதுகாப்பாக நீராடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள கடல் பகுதி ஆழமானதாகும். கடலில் நீராட செல்லும் பக்தர்கள் கடலுக்குள் நீண்ட தூரம் செல்ல வேண்டாம்
3. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவல்துறையால் ஒழுங்குபடுத்தபட்டுள்ளவாறு ஒரு வழிப் பாதையை பின்பற்றி நடந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
4. திருக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் அம்மன் பக்தர்களே! எனவே ஜாதி பெயரில் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிவதையும் பதாகைகள் (பேனர்கள்) கட்டுவதையும் தவிர்க்க வேண்டும், எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
5. தீச்சட்டிகளை திருக்கோயில் அருகில் அல்லது வழியில் அல்லது கண்ட கண்ட இடங்களில் போடுவதால் விபத்து கோரவும், பிற பக்தர்கள் தீக்காயமடையவும் நேரலாமென்பதால் தீச்சட்டிகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடலுக்கு செல்லும் வழியில் தான் இறக்க வேண்டும்.
6. பத்து வயதுக்கு மேற்பட்டும் 50 வயதுக்குட்பட்டுள்ள பெண் பக்தர்கள் காளி வேடமணிவதை திருக்கோயில் மற்றும் தங்கள் நலன் கருதி கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.
7. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு குலசை பஜார் வழியாக பழைய காவல் நிலையம் எதிரே உள்ள கோவில் நுழைவாயில் வழியாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
8. தசரா குழுவினர் தங்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி கியூ வரிசையில் வந்து காப்பு கட்டி தரிசனம் செய்து செல்லுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
9. கலைக்குழுவினருடன் வரும் தசரா குழுவினர் திருக்கோயிலுக்கு வரும் முன் கலைக் குழுவினரை கலை நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு அனுப்பிவிட்டு பக்தர்கள் மட்டும் அமைதியாக வந்து தரிசனம் செய்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
10. கலை நிகழ்ச்சி நடத்தும் தசரா குழுவினர் சட்டத்துக்கு புறம்பாக மின்சாரம் எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
11. ஒவ்வொரு தசரா குழுவினரும் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் பக்தர்கள் வசதிக்காக தனித்தனியே தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் தர்மம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
12. தசரா குழுவினர் திருக்கோயிலுக்கு வரும் போது பிறபக்தர்கட்கு இடையூறு ஏற்படும்படியோ பிறர் மனம் புண்படும்படியோ நடந்து கொள்ள கூடாதென வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
13. திருக்கோயிலுக்கு வேடமணிந்து வரும் பக்தர்கள் திருக்கோயில் நற்பெயருக்கும், புனிதத்தன்மைக்கும் களங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
14. திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புவர்கள் உண்டியல் மூலமாகவோ அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரசீது பெற்றுக் கொண்டுதான் செலுத்த வேண்டும்.
15. நம்முடனே கள்வர்களும் இருப்பர் இதனை உணர்ந்து நம் உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருங்கள்.
16. மதிப்புமிக்க நகைகளை நாமோ, குழந்தைகளோ அணிந்து கூட்ட நெரிசலில் வருவதை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
17. செல்போன் போன்ற நமது உடமைகளை அறிமுகமில்லாத பிறரிடம் கொடுத்து பயன்படுத்தவோ அல்லது பாதுகாத்துக் கொள்ளவோ கொடுக்கவேண்டாம்.
18. நண்பர்கள் போலவோ உறவினர்கள் போலவோ பேசும் நபர்களை கூட்ட நேரத்தில் தவிர்த்து விடுங்கள்.
19. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஒழுக்கம் கட்டுப்பாடு திருக்கோயில் புனிதத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
20. திருக்கோயிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
21. தசரா குழுவினர் பயன்படுத்தும் ஒலி பெட்டியின் ஒலியினை மிக குறைந்த அளவில் வைத்து பயன்படுத்தவும், பக்தி பாடல்களை மட்டுமே பயன்படுத்தவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
22. திருக்கோயில் மற்றும் பக்தர்கள் நெருக்கடி ஏற்படும் இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே தவறு செய்வோர் மீது காவல்துறையால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.